காதல் திருமணம் நடந்த 3 மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை.. வேலூர் அருகே சோகம்!

 
Vellore

வேலூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒருவர் பின் ஒருவராக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் கீழ் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஓய்வு பெற்ற டாஸ்மாக் ஊழியர். இவரது மகன் பூவரசன் (26). இவர் அப்பகுதியில் டிரைவராக வேலை செய்து வந்தார். பூவரசனுக்கும் கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டினார்கள். இதனால் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூவரசன் ஐஸ்வர்யா தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், பூவரசனின் பெற்றோர் கடந்த ஞாயிறு அன்று வெளியூருக்கு சென்றுள்ளார்கள். அப்போது பூவரசன் - ஐஸ்வர்யா தம்பதி வீட்டில் இருந்தனர். அப்போது ஐஸ்வர்யா தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு பூவரசனை கேட்டுள்ளார். அதற்கு பூவரசன் மறுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாராம்.

suicide

சிறிது நேரம் கழித்து பூவரசன் வீட்டுக்கு வந்தபோது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூவரசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே ஐஸ்வர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் காதல் மனைவி தற்கொலை செய்தது, பூவரசனை மிகவும் பாதித்திருக்கிறது. மருத்துவமனையில் கதறி அழுத அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்ற முயற்சித்தார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலை தனது மனைவி ஐஸ்வர்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே சுற்றி சுற்றி வந்த பூவரசன் உறவினர்களிடம் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். 

dead-body

கழிவறைக்கு சென்ற பூவரசன் நீண்ட நேரமாக வரவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பூவரசன் கழிவறையில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். எனினும் பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

From around the web