கோவையில் குப்பையில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடுகள்.. மக்கள் அதிர்ச்சி!

 
Coimbatore

கோவையில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக் துண்டுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் குப்பைகளை சேகரித்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்று வித்தியாசமாக இருந்ததால், பணியாளர்கள் சந்தேகம் அடைந்தனர்.

Coimbatore

இதையடுத்து, அதனை திறந்து பார்த்த போது, உள்ளே 2 மனித மண்டை ஓடுகள் உட்பட எலும்புத் துண்டுகள் இருப்பது தெரியவந்தால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், மண்டை ஓடுகளை மீட்டு விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த மண்டை ஓடுகள் மருத்துவமனையில் இருந்து வீசப்பட்டனவா அல்லது மயானத்தில் இருந்து திருடப்பட்டனவா அல்லது மாந்திரீகம் செய்ய பயன்படுத்தப்பட்டனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Singanallur PS

மண்டை ஓடுகள் பிளாஸ்டிக் கவரில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து, அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் அங்கு நின்று வேடிக்கை பார்க்க துவங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாகன நெரிசலை சீர்படுத்தியதோடு, வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

From around the web