இந்து சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகன்... முஸ்லிம் தம்பதி அடித்து படுகொலை.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் இந்து சிறுமியை மகன் காதலித்த நிலையில், அவருடைய பெற்றோர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி கம்ருல் நிஷா. இந்த தம்பதியின் மகன் சவுகத். இவர், அந்த பகுதியை சேர்ந்த ராம்பால் என்பவரின் மகள் ரூபி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதலை ராம்பால் குடும்பத்தினர் ஏற்கவில்லை. எனினும், கடந்த 2020-ம் ஆண்டு ரூபியை சவுகத் கடத்தி சென்றார்.
அப்போது, ரூபி மைனர் என்ற அடிப்படையில் வழக்கு பதிவானது. இதில், சவுகத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்து சவுகத் விடுதலையானதும் அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் கூறுகின்றனர்.
இந்த சூழலில், கடந்த ஜூனில் ரூபியை மீண்டும் கடத்தி சென்று, சவுகத் திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த ரூபி குடும்பத்தினர் சவுகத்தின் பெற்றோரை கடுமையாக தாக்கி உள்ளனர். இரும்பு தடிகள், கட்டைகளை கொண்டு அடித்து, உதைத்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல் தப்பியோடி விட்டது. இந்நிலையில், போலீஸ் சூப்பிரெண்டு சக்ரேஷ் மிஷ்ரா தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.