கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, 2 பேத்திகள் பலி.. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது நேர்ந்த சோகம்!!

 
chennai

திருத்தணியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாட்டி, 2 பேத்திகள் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் கடந்த மாதம் 10-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் 30-ம் நாள் துக்க அனுசரிப்பில் பங்கேற்பதற்காக உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பார்வதி அகரம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா (65) மற்றும் அவரின் பேத்திகள் ஹேமலதா (16), கோமதி (13) உள்பட 6 பேர் நேற்று முன்தினம் திருத்தணி பெரியார் நகர் பகுதியில் உள்ள பாபு வீட்டிற்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மல்லிகா தனது பேத்திகளான ஹேமலதா, கோமதி ஆகியோருடன் பெரியார் நகர் பகுதியில் செயல்படாமல் உள்ள கல்குவாரி குட்டை அருகே சென்றனர். 50 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் கோமதி மற்றும் ஹேமலதா அகியோர் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் இருவரும் வழுக்கி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகா பேத்திகள் இருவரையும் காப்பாற்ற கல்குவாரியில் இறங்கி அவரும் நீரில் மூழ்கினார்.

water

இதில் 3 பேரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருத்தணி போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

சம்பவ இடத்திற்கு திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சிபின் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.

Thiruttani

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வினை பொது மக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாவட்ட கலெக்டர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இறந்த ஹேமலதா ப்ளஸ்-1 வகுப்பும், கோமதி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துக்க நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில் 3 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web