மின் வேலியில் சிக்கி தந்தை - மகன் பலி.. வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது விபரீதம்!

 
Nellai

நெல்லை அருகே தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அடுத்து உள்ள மணிமுத்தாறு அருகே அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (55). இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வனராஜிக்கு திருமணமாகவில்லை. இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. 

இந்த நிலையில் வயலில் போட்டிருந்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவும், காட்டு விலங்குளிடம் இருந்து பயிரை பாதுகாக்க காவல் பணிக்காகவும் நேற்று இரவு 10.30 மணியளவில் பேச்சிமுத்து தனது மகன் வனராஜை அழைத்துக் கொண்டு வயலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

shock

இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அங்குள்ள வயலை ஒட்டிய ஓடையில் இறந்து கிடந்தனர். அதனை சிலர் பார்த்து பேச்சிமுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் அயன்சிங்கம்பட்டி கிராமம் முழுவதும் பரவியது. இதனால் கிராம மக்கள் காட்டுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது தந்தை - மகன் 2 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமுத்தாறு போலீசார், உயிரிழந்த 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Police

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இரவு நேரங்களில் வயலுக்கு வனவிலங்குள் வருவதை அறிந்து கால்வாயில் வைத்து அவற்றை வேட்டையாடுவதற்காக சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். அந்த வேலிக்கு மின்சாரம் செலுத்த அருகில் சென்ற தாழ்வழுத்த மின்கம்பியில் அந்த மர்ம நபர்கள் கொக்கி போட்டு வயர் மூலமாக மின்சாரம் செலுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அறியாமல் பேச்சிமுத்துவும், வனராஜூவும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது, மர்ம நபர்கள் போட்டிருந்த மின்வயர், மின்வேலியில் தண்ணீர் பட்டு, அதில் மின்சாரம் பரவி உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தந்தை - மகன் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர்கள் பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web