மனைவி பிரிந்து சென்றதால் மகன்களை கொன்ற கொடூர தந்தை.. குடும்ப தகராறில் நடந்த விபரீதம்!

 
Kallakurichi Kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவி தாய்வீட்டிற்கு சென்ற நிலையில் தனது 2 மகன்களை தலையணையால் முகத்தை அழுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம்  கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சுரேஷ் (35). இவரது மனைவி சரிதா (31). 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு(9), கேசவ்(6) என 2 மகன்கள். பெர்லின் 4ம் வகுப்பும், கேசவ்(6) 1ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரிதா தனது கணவர் மற்றும் மகன்களை பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் கங்கதேவன்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பெர்லின் சஞ்சு மற்றும் கேசவை சுரேஷ் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார்.

boy-dead-body

இதுகுறித்து, சுரேஷின் தந்தையும், சிறுவர்களின் தாத்தாவுமான பழனி கொடுத்தத் தகவலின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, பிரதாப் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுரேசை தேடி வந்தனர்.

இதில் கங்கதேவன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த சுரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சுரேஷ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, நானும், சரிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது நடத்தையில் சரிதா சந்தேகப்பட்டு வந்தார். இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நான் நிம்மதி இன்றி தவித்து வந்தேன். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் என்னிடம் கோபித்து கொண்டு சரிதா அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

Kachirayapalayam PS

இதில் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் சென்றுவிட்டால், குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என கருதினேன். எனவே வரும் காலத்தில் எனது குழந்தைகள் கஷ்டபடக்கூடாது என்பதற்காக அவர்களை கொன்றுவிட்டு அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது மகன்களின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினேன். இதில் மூச்சித்திணறி அவர்கள் இறந்தனர்.

பின்னர் நான் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எனது மனைவி தான் காரணம். எனவே அவரையும் கொன்று விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நான் எனது மாமியார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

From around the web