2 மாத பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தந்தை.. திருப்பூரில் பயங்கரம்
பல்லடத்தில் குடிபோதையில் 2 மாத குழந்தையை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் அலுவலக வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு சூர்யதாஸ் என்ற 2 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மணிகண்டன் குழந்தையை தாக்கியுள்ளார். இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.
இதையடுத்து குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் சரோஜினி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவனமையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் சரோஜினி கதறி அழுதார்.
இதையடுத்து குழந்தையை தாக்கியதாக மணிகண்டன் மீது தொடரப்பட்ட வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.