மறுதேர்விலும் தோல்வி... தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை..!

 
Virnchipuram

வேலூர் அருகே மறு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அன்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் சுமதி. கணவரை இழந்த இவர் கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மகன் சுரேஷ் ராஜா (16). கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அதையடுத்து அவர் தோல்வி அடைந்த பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக தயாராகி வந்தார்.

அந்த சமயத்தில் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சுரேஷ் ராஜா கடந்த மாதம் 10-ம் வகுப்பு மறுதேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று வெளியானது. மறுதேர்விலும் அவர் தேர்ச்சி அடையவில்லை.

Suicide

இதனால் மனமுடைந்த சுரேஷ்ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் இதைக்கண்டு விரிஞ்சிபுரம் போலீசாருக்கும், அவருடைய அம்மா சுமதிக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து வேலைக்கு சென்ற சுமதி உடனடியாக வீட்டிற்கு வந்து சுரேஷ் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Virinchipuram PS

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. மறுதேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web