மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை.. கடன் தொல்லையால் பரிதாபம்!

 
Madurai Madurai

மதுரை அருகே கடன் தொல்லையால் மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (41). முன்னாள் ராணுவ வீரரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி விசாலினி (36). இந்த தம்பதிக்கு ரமிசா ஜாஸ்பெல்(12) என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ரமேஷ் அதன் பின்பு வீட்டுக்கதவை திறக்கவில்லை. 

poison

இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை தள்ளி பார்த்த போது அது உள்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகியோர் இறந்து கிடந்தனர். 3 பேரும் விஷம் குடித்து இறந்து இருக்கலாம் என தெரியவந்தது.

போலீசார் அவர்களின் 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரமேஷ் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை. அதிக கடன் ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Tiruppalai PS

மேலும் போலீசார் அங்கிருந்த 25 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை எழுதி உள்ளார். மேலும் அந்த கடிதத்தில், நரிமேட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பெண் தரப்பில் பணம் கேட்டு தொல்லை செய்ததால் தற்கொலை கொண்டதாகவும் அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web