பட்டப்பகலில் பரபரப்பு.. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. ஒரு தலை காதலால் இளைஞர் வெறிச்செயல்!

 
Chennai

சென்னையில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)‌. 16 வயதான இவர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வரும்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக மாணவியை வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். 

murder

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த வசந்த் (24) என்ற இளைஞர் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரியவந்தது. 

Pallikaranai-PS

மேலும் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் வசந்த் தனது காதலை ஏற்குமாறு மாணவியை வற்புறுத்தியதும், காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தலை, கை, காலில் சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. தப்பிச்சென்ற வசந்த்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

From around the web