குடிபோதையில் தகராறு.. ரவுடியை கொன்று புதைத்த தொழிலாளர்கள்.. சென்னையில் அதிர்ச்சி!

 
chennai
சென்னை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் ஒரு வாரத்திற்குப் பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (39). இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக பெருங்குடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருடன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்துரு (22), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா (45) ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு திடீரென, முத்து, சந்துரு, ராஜா ஆகிய மூவரும் மாயமாகினர். இது குறித்து கட்டிட பொறியாளர் அளித்த தகவலால் அதிர்ச்சி அடைந்த முத்து உறவினர்கள், அவரை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்தக்கரைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் தப்பியோடிய சந்துரு மற்றும் ராஜா கோவையில் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்று அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

Murder

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒன்றாக பணியாற்றி வந்த நிலையில், முத்து, சந்துரு மற்றும் ராஜாவை மிரட்டி, தான்தான் இங்கு பெரிய ரவுடி, தன்னை மீறி எதுவும் செய்யக்கூடாது என கத்தியை காட்டி மிரட்டியும் அடித்தும் வந்துள்ளார். இதனால் இருவரும் முத்து மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். கடந்த 24ம் தேதி முத்துவும் சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த முத்து, கத்தியை காட்டி மிரட்டியதால் கோபம் அடைந்த சந்துரு, அந்த கத்தியை பிடுங்கி முத்துவின் முகத்தில் பலமாக வெட்டியுள்ளார். பின்னர் ராஜாவை அழைத்து கத்தியை கொடுத்து அவரையும் வெட்டுமாறு கூறியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Police

அவரது உடலை அருகிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு, ராஜா மற்றும் சந்துரு இருவரும் கோவை தப்பிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும், இன்று சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த போலீசார் கொலையான இடத்தை அடையாளம் காட்ட வைத்தனர். பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவக்குமார், தடையவியல் உதவி இயக்குனர் அன்வர் ஆகியோர் முன்னிலையில் முத்துவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது.

முத்துவின் உடலை தலைகீழாக இருவரும் புதைத்திருந்தது அப்போது தெரியவந்தது. இதனை கண்ட முத்துவின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என முத்துவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web