ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை.. சடலத்தின் அருகே தூங்கிய போதை கொலையாளிகள்.. புதுச்சேரியில் கொடூரம்!

 
Puducherry

புதுச்சேரியில் வாய் தகராறில் ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்கள், பிணத்தின் அருகிலே படுத்து தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஆக்டிங் டிரைவரான இவர் நேற்று மாலை மூலக்குளத்தில் உள்ள தனியார் டிரான்ஸபோர்ட் கம்பெனிக்கு ஆக்டிங் டிரைவாக சென்றுள்ளார். பணி முடிந்து நள்ளிரவு மூலக்குளத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதிகாலை ஆகியும் சண்முகசுந்தரம் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் அரியூர் பேருந்து நிறுத்தம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகசுந்தரத்தின் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

murder

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மோப்ப நாய் சம்பவ இடத்திலே சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலை நடந்த இடத்திற்கு அருகே இரண்டு பேர் மது போதையில் தூங்கி கொண்டிருப்பதை கண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் நேற்று சண்முகசுந்தரம் பயணித்த அதே பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது பயங்கர மது போதையில் இருந்த இருவரும் சண்முகசுந்தரத்தை கேலி செய்துள்ளனர். இந்நிலையில் தனது ஊர் வந்ததும் ‘தைரியம் இருந்தால் கிழே இறங்குங்கள்’ என சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

arrest

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கொஞ்ச தூரம் சென்றதும் பேருந்தை நிறுத்தி இறங்கி சண்முகசுந்தரத்தை பின்தொடர்ந்து தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web