குடிக்கப் பணம் கிடையாதா? குடியிருந்த வீட்டின் கூரையில் தீ வைத்த கணவன் கைது!!

மது வாங்க பணம் தர மறுத்த மனைவியை கண்டித்து வீட்டுக்கு தீ வைத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் 52 வயது செல்வராஜ்.இவரின் மனைவி பெயர் ரதிதேவி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் செல்வராஜ்.
தண்டனை முடிந்து திரும்பி வந்த செல்வராஜ், மதுகுடிப்பதற்காக மனைவி ரதிதேவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ரதிதேவி பணம் கொடுக்க மறுத்து சத்தம் போட்டுள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய செல்வராஜ், குடியிருக்கும் வீட்டுக்குத் தீ வைத்துள்ளார்.
மேற்கூரையில் பிடித்த 'தீ' மளமளவென பற்றி எரியவும் வீட்டினுள் இருந்த அனைவரும் வீட்டைவிட்டு பத்திரமாக வெளியேறி விட்டனர். அக்கம்பக்கத்த்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கூரையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் வைத்திருந்த சில முக்கிய ஆவணங்களும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
புகார் கிடைத்த சிவகிரி போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செல்வராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.