திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.. தஞ்சாவூரில் பரபரப்பு

 
Pandanallur

தஞ்சாவூர் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்க்குண்ணம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லத்தம்பி. இவரது மகன் கலைவாணன் (30). திமுக நிர்வாகியான இவர் அப்பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். திருப்பனந்தாள் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ க.சொ.க.கண்ணின் சகோதரி மகன்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பைனான்ஸ் வசூல் செய்து பின்னர் தனது வயலுக்கு மோட்டாரை இயக்கச் சென்ற கலைவாணன் நள்ளிரவு வரை வீடு திரும்பாததை அடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது உடலில் பல இடங்களில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

Pandanallur

இதனையடுத்து பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை துப்பு துலக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே இரண்டு மது பாட்டில்களையும் ஒரு ஜோடி செருப்பையும் கைப்பற்றியுள்ளனர். இது குற்றவாளிகளுடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். அந்த மதுபாட்டில்களில் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவாகியுள்ளன. அந்த மது பாட்டில்களில் உள்ள சீரியல் நம்பர்களை வைத்து அது எந்த கடையில் வாங்கப்பட்டுள்ளது என கண்டறிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Pandanallur PS

இந்நிலையில் கலைவாணனின் வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே திட்டமிட்டு கலைவாணன் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். கலைவாணனுக்கு முன்விரோதிகள் யாரும் உள்ளனரா என அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

From around the web