மாமூல் கேட்டு திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிய கும்பல்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
Kanchipuram

பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவம் ஆதனூர் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர், ஆதலூர் ஊராட்சியில் திமுக அவை தலைவராக உள்ளார். மேலும் டிராக்டர், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை வைத்து வீட்டு கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் சக்கரபாணியிடம் மாதம் மாதம் மாமூல் தரவேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. ஆனால் சக்கரபாணி மமூல் தர மறுத்து வந்துள்ளார்.

murder

இந்நிலையில் சக்கரபாணி வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை துரத்தி உள்ளனர். தப்பியோடிய சக்கரபாணியை மர்ம நபர்கள் துரத்தி கை, கால்கள் மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வெட்டுகாயத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சக்கரபாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சக்கரபாணி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Manimangalam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்கள். மேலும் சக்கரபாணியை வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் ஜேசிபி வைத்து தொழில் செய்து வருவதால் கடந்த ஆண்டு மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவரை கொலை செய்த அதே ரவுடி கும்பல் ஒரு மாத காலமாக மாமூல் கேட்டு மிரட்டி வந்ததாகவும், சக்கரபாணி மாமூல் தரவில்லை என்பதால் இந்த கொலை வெறி தாக்குதல் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web