மது அருந்தியவர்களை தட்டி கேட்டதால் தகராறு.. பேக்கரி உரிமையாளர் வெட்டிக் கொலை.. மனைவி கண்முன்னே அதிர்ச்சி சம்பவம்!

 
Virdhunagar

ராஜபாளயத்தில் மனைவி கண்முன்னே கணவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி நடத்தி வருகிறார். தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், தன் மனைவி காளீஸ்வரி, 5 வயது மகன் குருசக்தி இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை (நவ. 12) 4 மணி அளவில் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதியிலுள்ள தனது சொந்த நிலத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றார்.

murder

அப்போது சிவக்குமாரின் இடத்துக்கு அருகே நான்கு பேர் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிவக்குமார், மது அருந்திக்கொண்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டு விரட்டி இருக்கிறார். அந்தச் சமயம் அங்கிருந்தவர்கள் எதுவும் சொல்லாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, சிவக்குமார் தன் குடும்பத்தாருடன் வீட்டுக்குத் திரும்பினர்.

அப்போது செல்லும் வழியில், அடையாளம் தெரியாத 4 பேர் சிவக்குமாரின் டூ வீலரை இடைமறித்து இருக்கின்றனர். தொடர்ந்து, டூ வீலரிலிருந்து சிவக்குமாரை கீழே தள்ளியவர்கள், அவர்மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனாலும் ஆத்திரமடங்காத கும்பல், மனைவியின் கண்முன்னே சிவக்குமாரை, தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. பலத்த வெட்டுக் காயத்தால் சிவக்குமார் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Rajapalayam South PS

இந்தச் சம்பவம் குறித்து, சிவக்குமாரின் மனைவி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிவகுக்மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிவக்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதற்காக ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் வெட்டி கொலை செய்ததா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

From around the web