மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. மகளுடன் குளத்தில் குதித்து தந்தை தற்கொலை!

 
Pudukkottai

 புதுக்கோட்டை அருகே தந்தை - மகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பால்ராஜ் (34). இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (30). இந்த தம்பதிக்கு ரிஷி (7) என்ற மகனும், நிதர்சனா (4) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலை அருகே உள்ள வில்லாருடையில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பால்ராஜ், அவரது 2 குழந்தைகளுடன் கட்டக்குடியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த மாதம் தனது மகன் மூலம் செல்போனில் பிரியாவை, பால்ராஜ் தொடர்பு கொண்டார். அப்போது குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புவதாகவும், அதனால் விராலிமலை முருகன் கோவிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதை நம்பிய பிரியா விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் மலை அடிவாரத்தில் நின்றிருந்த பால்ராஜிடம், குழந்தைகள் எங்கே என்று பிரியா கேட்டுள்ளார். அதற்கு பால்ராஜ், குழந்தைகள் மலைமீது உள்ளதாக கூறியுள்ளார். 

water

இதனை நம்ப மறுத்த அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பிரியாவின் உடலில் ஆங்காங்கே குத்தியுள்ளார். இதையடுத்து பிரியா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பால்ராஜை சுற்றி வளைத்து பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். 

இதற்கிடையே காயமடைந்த பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் பால்ராஜ் வெளியே வந்தார். நேற்று  அதிகாலை பால்ராஜ் தனது மகள் நிதர்சனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் இன்று காலை கட்டக்குடி தர்மகுளம் வழியாக பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் பால்ராஜூம், நிதர்சனாவும் சடலமாக மிதந்தனர். இதையடுத்து இலுப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் போலீசார் விரைந்து வந்து குளத்தில் இறங்கி 2 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தினர். 

Illupur PS

அப்போது, பால்ராஜ் தனது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் மகள் நிதர்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த பால்ராஜின் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. 

இதற்கிடையே போலீசார் தந்தை - மகள் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web