டீ குடிக்க கூப்பிட்ட வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பதி.. சென்னையில் பயங்கரம்

சென்னையில் டீ குடிக்க கூப்பிட்ட உறவுக்கார வாலிபரை பீர் பாட்டிலால் கணவன்-மனைவி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (20). இவருக்கும், அவரது உறவினர்களான பிரபு - காயத்ரி தம்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ராகுல் டேம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பிரபு மற்றும் அவரது மனைவி காயத்ரியை டீ குடிக்க அழைத்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் ‘நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க கூப்பிடுகிறாய்’ என்று ஆத்திரமடைந்து ராகுலிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினர். இதில் ரத்த காயங்களுடன் நிலைகுலைந்து கீழே விழுந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராகுல் சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் ரிச்சி தெருவைச் சேர்ந்த தம்பதி பிரபு, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.