வாலிபரை கொன்று பாலாற்றில் புதைத்த கல்லூரி மாணவர்கள்.. வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கேட்டதால் விபரீதம்

 
Walajabad Walajabad

வாலாஜாபாத் அருகே வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள அய்யம்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் ருத்திரகோட்டி. இவரது மனைவி மோகன பிரியா. நெசவு தொழில் செய்து வருகிறார்கள். பட்டு ஜரிகை அடகு கடையும் வைத்து உள்ளனர். இவர்களது மகன் தனுஷ் (21). பிஎஸ்சி கணிதம் படித்து உள்ள அவர் அரசு பணிக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு அரசு பணிக்கான தேர்வும் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். அப்போது வெளியே சென்ற தனுஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். மேலும் தனுஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து தனுசின் நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் வலது கால் ஒன்று தனியாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த காலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பாலாற்று பகுதி முழுவதும் கால் துண்டிக்கப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

murder

அப்போது பாலாற்றில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தை தோண்டிய போது  அழுகிய நிலையில் தனுசின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தனுஷ் மாயமான அன்று கார் ஒன்று அவ்வழியே செல்வது பதிவாகி இருந்தது. அது அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கொலையுண்ட  தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் என்பது தெரிந்தது. 

அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது நண்பரான சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுசை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விஷ்வா, சுந்தர் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

விஷ்வா புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கவும் வீட்டை பழுது பார்க்கவும் சிறுக, சிறுக தனுஷின் பெற்றோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று இருக்கிறார். இந்த பணத்தை  விஷ்வா திருப்பி கொடுக்கவில்லை. மேலும் பணத்திற்கான வட்டியும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தனுஷ் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி நெருக்கடி கொடுத்து இருக்கிறார்.

Walajabad PS

இதனால் கோபம் அடைந்த விஷ்வா நண்பரான தனுசை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனுசை காரில் அழைத்து சென்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தார். இதற்கு உடந்தையாக மற்றொரு நண்பர் சுந்தர் இருந்தார். பின்னர் தனுசின் உடலை பாலாற்றில் மணலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிச்சென்று உள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் அந்த பகுதியில் இருந்த மணல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. 

இதையடுத்து அங்கு சுற்றிய நாய்கள் புதைக்கப்பட்ட தனுசின் காலை கடித்து துண்டாக்கி தனியாக இழுத்து வந்து உள்ளன. இதன்பின்னரே தனுஷ் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் வாலாஜாபாத் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.

From around the web