தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரர்கள்.. தட்டிக் கேட்ட காதலன் கொடூர கொலை..!

 
Tambaram

தாம்பரம் அருகே தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரர்கள், காதலனை தூக்கிச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (21). இவர், இறுதி ஊர்வலங்களில் மோளம் அடிக்கும் வேலை செய்து வந்தார். இவர் பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டு மேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்து கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதனால் உடனே அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இந்த திருமணத்தை தடுக்க நினைத்த காதலன் ஜீவா அந்த மாப்பிள்ளைக்கு, தான் அந்த பெண்ணுடன் இருக்கும் புகை படத்தை அனுப்பியுள்ளார். இது குறித்து பெண்ணின் தந்தை கோவிந்தராஜனுக்கு தெரிய வர கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன்கள் ஜீவாவை கண்டித்ததுடன் மிரட்டலும் விடுத்துள்ளனர்.

murder

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரயில்வே கேட் பகுதியில் ஜீவா பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பெண்ணின் சகோதரர்கள், சகோதரியை அடித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதை தட்டி கேட்பதற்காக ஜீவா தனது நண்பர்களுடன் காதலியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்தவுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் கலைந்து ஓடிவிட்டனர். அதன் பிறகு மீண்டும் இரவு 11 மணி அளவில் ஜீவா நண்பர்களுடன் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவுடன் வந்தவர்களை அடித்து விரட்டி உள்ளனர்.

Peerkankaranai PS

இதில் ஜீவா மட்டும் தனியாக அவர்களிடம் சிக்கி கொண்டார். அவரை அங்குள்ள மயான பகுதிக்கு தூக்கி சென்று அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை தூக்கி போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த நாய் ஒன்று இவர்களைப் பார்த்து குறைத்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த இந்த கும்பல் நாயையும் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. மயானத்தில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த ஜீவாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் மண்ணிவாக்கம் ஏரி அருகே பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் சகோதரர்கள் விஜய், அஜித் அவர்களது நண்பர் அரவிந்தன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web