குடும்ப தகராறு.. அண்ணனை மண்வெட்டியால் கொன்ற தம்பி.. விழுப்புரத்தில் பரபரப்பு
குடும்ப தகராறில் அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள காகுப்பம் பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் குப்புசாமி (எ) கதிர்வேல் (47). இவர், டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவரது தம்பி பாரதி (45) போர்வெல் தொழிலாளி. அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இவர்களுக்குள் நேற்று காலை 11 மணிக்கு குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது கதிர்வேல், தனது தம்பி பாரதியின் மனைவி புஷ்பாவை திட்டி, தாக்கினார். இதுகுறித்து மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பாரதியிடம் அவரது மனைவி புஷ்பா கூறினார். உடன் பாரதி, கதிர்வேல் வீட்டிற்குச் சென்று தனது அண்ணனிடம் என் மனைவியை நீ எப்படி அடிக்கலாம் எனக் கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாரதி, அருகில் இருந்த மண் வெட்டியால், கதிர்வேலின் தலையில் வெட்டினார். அதில் படுகாயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். அண்ணனை கொலை செய்துவிட்டு தம்பி அப்பகுதியிலிருந்து தப்பித்து சென்றுள்ளார். கொலை சம்பவம் குறித்து அப்பகுதியினர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கதிர்வேல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, பாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
