புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை... காதல் திருமணம் செய்த 25 நாட்களில் நடந்த சோகம்!!

ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்து 25 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ள விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். மேலும் வங்கி தேர்வு எழுதுவதற்காக ஆம்பூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பயிற்சி வகுப்புக்கு சென்ற போது மின்னூர் பகுதியை சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமுருகனும், அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு மின்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அனுப்பிரியா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஆம்பூர் தாலுகா காவல் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் காவல் நிலையம் முன்பாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். திருமணமாகி 25 நாட்களே ஆவதால் அனுப்பிரியா இறப்புக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார். இந்த நிலையில் திருமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.