தாய்ப்பால் தருவதில் பிரச்னை.. ஒரு மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்..!

 
Udumalaipettai

உடுமலை அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தீபாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (28). இவரும், வசந்தி (26) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். பின்னர், தீபாலப்பட்டியில் வசித்து வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு வசந்தி கர்ப்பமானார். இதற்கிடையே, சசிக்குமாருக்கு தெரியாமல், வசந்தியின் பெற்றோர் கருவை கலைத்து விட்டனர். 

இதனால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது வசந்திக்கு, வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் சிறிது காலம் இருந்துவிட்டு, அவரையும் வசந்தி பிரிந்தார். அதன்பிறகு, முதல் கணவரான சசிக்குமாருடன் வாழ விருப்பம் தெரிவித்து, அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

baby

இந்த சூழலில் வசந்தி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 3ம் தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் வசந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்து விட்டு, குடும்ப செலவுக்கு அவர் பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்ததாக சசிக்குமாரிடம், வசந்தி தெரிவித்துள்ளார். அதன்பின், குழந்தையை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், போலீசார் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.

Udumalaipettai PS

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வசந்தியை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் வசந்தி கூறுகையில், “எனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இதனால், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றேன்” என கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web