காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்று உயிரை விட்ட காதலன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவ்ம!!

 
Chettipalayam

கோவையில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நள்ளிரவில் வந்த காதலனை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரசாந்த் (21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரசாந்துக்கு செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த தன்யா (18) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 3 வருடங்களாக 2 பேரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். 

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் தன்யாவை அழைத்து பேசினர். அப்போது உங்களது காதலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கொஞ்ச நாட்கள் சென்ற பின்னர் உங்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் 2 பேரும் அடிக்கடி போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். 

இன்று பிரசாந்த் காதலி தன்யாவுக்கு பிறந்த நாள். இதனால் நள்ளிரவில் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட பிரசாந்த் முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி நேற்று இரவு பிரசாந்த், தனது நண்பர்களான தரணிபிரசாத், குணசேகரன், அபிஷேக் ஆகியோருக்கு தனது காதலியின் பிறந்த நாளையொட்டி விருந்து கொடுத்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்தனர்.

Murder

அப்போது நாம் கேக் வாங்கி கொண்டு, நேராக எனது காதலியின் வீட்டிற்கு சென்று, கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என பிரசாந்த் தெரிவித்தார். நண்பர்களும் அவருடன் வர சம்மதித்தனர். பின்னர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரும் ஒரே மொபட்டில் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு நள்ளிரவில் சென்றனர். அப்போது தாங்கள் வாங்கி வைத்திருந்த பிறந்த நாள் கேக்கினையும் எடுத்து சென்றிருந்தனர். மயிலாடும்பாறைக்கு சென்றதும், நேராக பிரசாந்த், தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

கதவு பூட்டி கிடந்ததால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் தன்யாவின் பெயரை சொல்லி வெளியில் வா என கூச்சல் எழுப்பினர். ஆனால் யாரும் வராததால் பிரசாந்த் உள்பட 4 பேரும் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் வீட்டின் அலார மணியை அழுத்தி கொண்டே, வீட்டில் யாரும் இல்லையா? வெளியில் வாருங்கள் என தன்யாவின் பெயரை சொல்லி அழைத்து வா நாம் உனது பிறந்த நாளை கொண்டாடலாம் என பிரசாந்த் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு, பெண்ணின் தந்தை மகாதேவன், பெண்ணின் தாய்மாமா விக்னேஷ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தனர். இவர்கள் 2 பேரும் கால் டாக்சி டிரைவர்களாக உள்ளனர்.

வீட்டிற்கு வெளியில் வந்த அவர்கள், வீட்டின் முன்பு பிரசாந்த் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் உனது காதலை ஏற்று கொண்டோமே எதற்காக நள்ளிரவு நேரத்தில் வந்து இப்படி சத்தம் போடுகிறாய் என பெண்ணின் தந்தை மகாதேவன் கேட்டார். அதற்கு பிரசாந்தும், அவரது நண்பர்களும், இன்றைக்கு உங்கள் மகள் பிறந்தநாள் அதனை கொண்டாட வந்துள்ளோம். வெளியில் வர சொல்லுங்கள் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடலாம் என்றனர். அதற்கு இந்த நேரத்தில் வேண்டாம். நாளை பார்த்து கொள்ளலாம். முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என தெரிவித்தனர். 

Chettipalayam PS

ஆனால் அவர்கள் செல்ல மறுத்து சத்தம் போட்டபடியே இருந்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தன்யாவின் மாமாவான விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினார். மேலும், பெண்ணின் தந்தை மகாதேவன், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரசாந்தை விக்னேசுடன் சேர்ந்து தாக்கினார். இதில் தோள்பட்டை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். 

இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் பிரசாந்த்தை தாங்கள் வந்த மொபட்டில் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியில் மொபட் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. இதனால் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் பிரசாந்த்தை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபரை கொன்ற பெண்ணின் தாய்மாமாவான விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான பெண்ணின் தந்தையை தேடி வருகின்றனர். பிரசாந்த் வெட்டப்பட்ட போது அவரது காதலியும் சம்பவ இடத்தில் இருந்தார். அவர் கண்முன்பு பிரசாந்த் தாக்கப்பட்டார். காதலி எவ்வளவோ தடுத்தும் பிரசாந்தை காப்பாற்ற முடியவில்லை. பிரசாந்த் உயிரிழந்ததை அறிந்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

From around the web