84 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. அரங்கேற்றிய கொடூரம்.. சிசிடிவியுடன் சிக்கிய சிறுவன் கைது.!
சென்னை அருகே 84 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் உள்ள அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி (84). இவர் யாரும் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் உணவு கொடுத்து உதவியும் வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி 25-ம் தேதி சாலையோரம் மூதாட்டி பொன்னி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி பொன்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் பொன்னி இறந்த நாளுக்கு முந்தைய நள்ளிரவில் அந்த வழியாக வரும் மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த அவரை தரதரவென சாலையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைக் கொண்டு மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சிசிடிவி கேமராவில் கொண்ட காட்சிகள் அடிப்படையில் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் அந்த சிறுவன் பொன்னியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 84 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.