ஏற்கனவே திருமணம்.. சாக்குமூட்டையில் இளம்பெண் சடலம்.. சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது!

 
chennai

சென்னையில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்ததால் மனைவியை கணவன் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (27). இவர், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரம்மாள் (25). சாரம்மாளுக்கு ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆமோஸ் என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆமோஸ், மனைவியை விட்டு பிரிந்து ஆந்திராவுக்கு சென்று விட்டார். அதன்பிறகு சாரம்மாள், அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.

அப்போது கல்யாணபுரம் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ஜான்சனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாரம்மாள், தனக்கு திருமணமாகி 2 மகன்கள் இருப்பதை மறைத்து, ஜான்சனிடம் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து ஜான்சன், சாரம்மாளை கடந்த மே மாதம் 7-ம் தேதி ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அங்கு சாரம்மாள் கழுத்தில் தாலி கட்டி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தார்.

Murder

திருமணமான மறுநாள் இந்த தகவல் சாரம்மாளுடைய பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள், பட்டாபிராம் வந்து சாரம்மாளை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். அதன்பிறகு சாரம்மாள் மீண்டும் ஜான்சனை தேடி வந்தார். பின்னர் ஜான்சன், ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் தனியாக அறை எடுத்து சாரம்மாளுடன் குடும்பம் நடத்த தொடங்கினார். அக்கம் பக்கத்தினரிடம் அவர் எனது அக்காள். எனக்கு சமைத்து போடுவதற்காக என்னுடன் இருக்கிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து சாரம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் விஷயம் ஜான்சனுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஜான்சன், காய்கறி நறுக்கும் கத்தியால் சாரம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அக்கம் பக்கத்தினர் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சாரம்மாளின் உடலை வெளியே கொண்டு போக முடியாமல் தவித்தார். பின்னர் சாரம்மாளின் உடலை சாக்கு முட்டையில் கட்டி வீட்டில் ஒரு ஓரத்தில் வைத்தார்.

Avadi PS

பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற ஜான்சன், 2 நாட்கள் அங்கேயே தங்கி வேலை செய்தார். நேற்று மதியம் சாரம்மாள் உடலை அப்புறப்படுத்த வீட்டுக்கு வந்தார். கொலை செய்து 2 நாட்கள் ஆகி விட்டதால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பயந்துபோன ஜான்சன், நேற்று மாலை ஆவடி காவல் நிலையம் சென்று நடந்த விவரங்களை சொல்லி சரண் அடைந்தார். போலீசார் கொலையான சாரம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜான்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web