சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொல.. திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது

 
Salem

சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அடுத்து உள்ள தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (64). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இவர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து மாரியம்மன் கோவில் வீதி வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

Murder

வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்த போது அவரை நோட்டமிட்டபடி 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் கும்பலாக எதிரில் திடீரென வந்தனர். அவர்கள் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களை குறுக்காக நிறுத்தினர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதைபார்த்த கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். கொலை குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

Police

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பிரமுகர் சதிஷ் சேலம் மாநகராட்சியின் 55-வது வார்டு கவுன்சிலரின் கணவர் ஆவார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web