கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. மானாமதுரையில் பரபரப்பு

 
Manamadurai

மானாமதுரையில் கருங்காலி மாலை வாங்கச் சென்ற வாலிபர் மீது நகைப்பட்டறை உரிமையாளர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெள்ளியிலான கருங்காலி மாலையை செய்வதற்கு கடந்த வாரம் மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள விஜய மார்த்தாண்டன் என்பவரது நகை கடையில் ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Acid attack

இதற்காக கருங்காலி மாலையை வாங்க தனது நண்பர் சதீஷ்குமாருடன் விஜயகுமார் மானாமதுரைக்கு நேற்று சென்றார். அப்போது மாலையின் தரம் குறித்து விஜய மார்த்தாண்டனுடன் வாக்குவாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகைப்பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டன் கடையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து சதீஷ்குமார் மீது வீசினார்.

இதனால் சதீஷ்குமார் படுகாயமடைந்தார். இதன் காரணமாக கடையில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த சதீஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Manamadurai-PS

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை போலீசார், விஜய மார்த்தாண்டனை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். கருங்காலி மாலை வாங்கச் சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web