குழந்தைக்காக கணவரின் 4 வயது மகனை நரபலி கொடுத்த மனைவி.. உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
UP

உத்தரப் பிரதேசத்தில் தனக்கு குழந்தை கிடைப்பதற்காக கணவரின் 4 வயது மகனை மாற்றாந்தாய் ஒருவர் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ரெஹ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து ரேனு பிரஜாபதி (30) என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதன்பின்னர் ரேனுவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது குழந்தை கருவிலேயே உயிரிழந்த சம்பவம் நடந்ததால் ரேணு அதிர்ச்சியுடன் காணப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனக்கு குழந்தை கிடைப்பதற்காக தயாராம் யாதவ் என்ற மந்திரவாதியை ரேனு நாடியுள்ளார். அவரிடம், ஜிதேந்திராவின் மகன் சத்யேந்திராவை பலி கொடுத்தால்தான் அவருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று மந்திரவாதி கூறியுள்ளார். 

Sacrifice

இதனை ஏற்று 4 வயது குழந்தையான சத்யேந்திராவை கடத்தி வந்து, ரேணு நரபலி கொடுத்து கொலை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் மற்றும் தந்தை உதவியாக இருந்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஞாயிறு அன்று விளையாட வெளியே சென்ற தனது மகன் சத்யேந்திரா வீடு திரும்பாததை கண்டு, தந்தை ஜிதேந்திரா போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் சத்யேந்திரா ரெஹ்சி கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கண், கன்னம், காது, நெற்றி உள்ளிட்ட இடங்களில் படுகாயம் காணப்பட்டுள்ளது. நரபலியின்போது சிறுவன் சித்ரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Police

இதுதொடர்பாக ஜிதேந்திரா அளித்த புகாரின் பேரில் ரேனு மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீதும் மந்திரவாதி தயாராம் யாதவ் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஜிதேந்திராவின் மாமனார் மங்ரூ, மாமியார் பிரேமா தேவி ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். சிறுவனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துண்டு, எலுமிச்சம்பழங்கள் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

From around the web