தூக்கி வீசப்பட்ட பள்ளி சிறுமி.. காவல்துறை வாகனம் மோதி பலி.. திருப்பூரில் சோகம்!!

 
Tiruppur

பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த 6 வயது சிறுமி போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இவரது மகள் திவ்யதர்ஷினி (6). இவர், விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து ராஜேஷ்வரி தனது குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு நல்லிகவுண்டன் நகர் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த காவல்துறை வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து வந்த சிறுமி தடுப்புச்சுவற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இந்த விபத்தில் 6 வயது பள்ளி மாணவி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Dead

அங்கிருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய திருப்பூர் காவல்துறை வாகனத்தை இயக்கிய ஊர்காவல் படையைச் சேர்ந்த சின்னக்கண்ணன் (28) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்த சிறுமி திவ்யதர்ஷினி மரணத்துக்கு நியாயம் கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டு இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் வாகன ஓட்டுநரான சின்னக்கண்ணனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது, காவல்துறை வாகனத்தை இயக்கி வந்த சின்னக்கண்ணன் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் வேகமாக வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, சின்னக்கண்ணனைக் கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Nallur PS

முன்னதாக சம்பவ இடத்திற்கு மாநகர காவல் துணை ஆணையர் வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண் முன்னே 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web