கோவை நீதிமன்றம் அருகே ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை.. காதல் திருமணம் செய்ய இருந்த நிலையில் சம்பவம்!!

 
Coimbatore

கோவை அருகே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடியை ஓட, ஓட வெட்டி ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரவுடி கோகுல் என்ற சொண்டி கோகுல் (22). இவர் மீது துடியலூர், சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கண்ணப்ப நகரை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோகுல் உள்பட 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோகுல் கடந்த சில நாட்களாக வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார். 

இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த வாரம் நீதிமன்றத்தில் கோகுல் ஆஜர் ஆனார். இந்நிலையில் நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு பின்புறம் கோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் காலை 11 மணியளவில் டீ குடிக்க சென்றனர். 

murder

அப்போது அவர்களை, 4 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தனர். அந்த நபர்கள் நீதிமன்றத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கோகுலும், மனோஜூம் டீ கடைக்கு நடந்து சென்றனர். கடையின் அருகே அவர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும், கோகுலின் அருகே வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கோகுலை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். 

கோகுலும், அவரது நண்பரும், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்கள். இருப்பினும், அந்த கும்பல் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கோகுலை வெட்டியது. இதில் அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. உடனே மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், மனோஜையும் வெட்டினர். இதில் தலை மற்றும் கால்களில் வெட்டுபட்ட மனோஜ் மேற்கொண்டு ஓட முடியாமல் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். 

இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோகுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய கொலை கும்பல், எந்த சம்பவமும் நடைபெறாதது போன்று நிதானமாக நடந்து சென்றனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றது. 

கொலை சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சிலர் அந்த பகுதியை விட்டு ஓடினார்கள். சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த இந்த காட்சியை சிலர், ஓரமாக ஒதுங்கி நின்றபடி தாங்கள் வைத்திருந்த செல்போனில் படம்பிடித்தனர். போலீசார் விசாரணை இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

Racecourse PS

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, கொலை செய்யப்பட்ட கோகுலும், படுகாயமடைந்த மனோஜும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். மனோஜ் கீரணத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டம் தீட்டியிருப்பதை அறிந்த அவர் எப்போதும் பாதுகாப்புக்காக தன்னிடம் ஒரு கத்தியை வைத்திருந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த போது கூட அவரது இடுப்பில் ஒரு கத்தியை சொருகி வைத்திருந்தது தெரியவந்தது.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்திற்கு தனியாக செல்ல விரும்பாத கோகுல், துணைக்கு தனது நண்பர் மனோஜை அழைத்து வந்துள்ளார். நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு வரும் போது 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து கோகுலை கொலை செய்து தப்பியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த கொலையில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சூர்யா (24), வெள்ளலூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (26), சித்தாபுதூர் கவாஸ்கான் (27), ரத்தினபுரியை சேர்ந்த ஒன்றரை என அழைக்கப்படும் கவுதம் (27) உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்யப்பட்ட கோகுல் காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு தாய் இல்லை. அந்த பெண்ணை காதலர் தினமான இன்று திருமணம் செய்ய கோகுல் திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஜாமீன் கையெழுத்து போட்ட பின்னர், காதலியை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த விவரம் தெரிந்த கும்பல், பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

From around the web