பிளாஸ்டிக் டப்பாவில் பிறந்து சில நாட்களான பச்சிளங்குழந்தை.. தஞ்சாவூர் அருகே பரபரப்பு
தஞ்சாவூர் அருகே பிறந்து சில நாட்களான பச்சிளங்குழந்தை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தென்னந்தோப்பில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய சரகம் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குணபாலன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக பொதுமக்கள் நடந்த சென்ற போது, தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் டப்பாவில் பச்சிளைங்குழந்தை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் அந்த டப்பாவில் அடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பச்சிளங்குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.