நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை.. செங்கோட்டையில் பரபரப்பு!

 
Tenkasi

செங்கோட்டை அருகே நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மனைவி தமிழ்செல்வி. தென்காசி யூனியன் முன்னாள் தலைவரான இவர், திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர்களுடைய மகன் ராஜேஷ் (25). திருமணமாகாத இவர், செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வை ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் காலை 10.45 மணியளவில் அங்கிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக ராஜேஷ் அதன் மீது அமர்ந்தார்.

crime

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று ராஜேஷை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்து திரண்ட ராஜேஷின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Sengottai PS

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பையில் வாகன சோதனை நடத்தியபோது 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள், நெல்லையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மந்திரமூர்த்தி (22), நாங்குநேரியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரி (19) என்பதும், ராஜேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான மந்திரமூர்த்தி, மாரி ஆகிய 2 பேரும் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, ரயிலில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளனர். அண்மையில் இருவரும் அங்குள்ள பஜாருக்கு சென்றபோது ராஜேசுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றபோதும், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனால் ஆத்திரத்தில் ராஜேஷை கொலை செய்ததாக மந்திரமூர்த்தி, மாரி ஆகியோர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

From around the web