போதை மறுவாழ்வு மையத்தில்14 வயது சிறுவன் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்

 
chozavaram

கும்மிடிப்பூண்டி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மனைவி அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). இவர் தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்த நிலையில், மனோஜ்குமார் பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர், உறவினர்களின் பேச்சைக் கேட்காமல் கண்டபடி ஊர் சுற்றி வந்துள்ளான். எனவே, அவரது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 21-ம் தேதி சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்ற போது மயக்கம் போட்டு மனோஜ்குமார் விழுந்துள்ளான். 

murder

உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் போதை மறுவாழ்வு மையத்தில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Sholavaram PS

இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழிவறையில் வைத்து சிறுவனை கட்டையால் தாக்கியதில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமானது. இதனை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web