13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்.. முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் கைது!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே என்சிசி முகாமிற்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர் உட்பட 8 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி என்சிசி முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிலையில், என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயதுடைய மாணவி கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் மாணவியை அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

Rape

அவர், ‘இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தனது தாயிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அழுதுள்ளார். அதை கேட்டு அதிர்ந்துபோன தாய், சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பின்னர் இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வர், பள்ளியில் பணிபுரியும் 7 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இதில் ஒருவர் முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஆவார்.

Police-arrest

மேலும், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தவறி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணையில், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சிவராமன் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web