முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. வாசுதேவநல்லூரில் பயங்கரம்!!

 
tenkasi

வாசுதேவநல்லூரில் முன் விரோத காரணமாக இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஐயப்பன் (52). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55). விவசாயியான இவர் பாஜக கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். குடும்ப உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே இட பிரச்னை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை இட பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்லத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

murder

அந்த சமயத்தில் அங்கு அய்யப்பனின் மகன் 17 வயதான சிறுவன் வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தி கொலை செய்தார். இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த சிறுவனை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். கொலை செய்யப்பட்ட செல்லத்துரைக்கு ஒரு மகளும், அய்யப்பனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Vasudevanallur-PS

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

From around the web