கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்.. கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!
கன்னியாகுமரி அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஸ் நேர்சிங் என்ற தனியார் கல்லூரி பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பல விதங்களில் துன்புறுத்தல்கள் கொடுப்பதாக பலவேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் காயம் ஏற்பட்டு மாணவர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவரின் புகாரின் அடிப்படையில் நேரில் சென்ற போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தனர். அப்போது, இதே போல் இனி நடக்காது என மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சுமித்திரன் (19). இவர் இந்த கல்லூரியில் 2 ஆண்டுகளாக படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கியுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இவருடன் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று வழக்கம் போல் வகுப்பு முடிந்து அறைக்கு வந்த சுமித்ரன் யாருடன் பேசாமல் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று 1 மணியளவில் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற சுமித்ரன் அறைக்கு திரும்ப வரவில்லை. மறுநாள் காலையில் சுமித்ரனை காணவில்லை என அவரது அறையில் தங்கியுள்ள சக மாணவர்கள் தேடியுள்ளனர். அப்போது சுமித்ரன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.