விஷம் கலந்த குளிர்பானம்... மாணவியின் வாயில் ஊற்றிய மாணவர்கள்!!

 
Poison

திருச்சியை சேர்ந்த 19 வயது இளம்பெண் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவரை கல்லூரி மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அவர் காதலை மாணவியிடம் கூறியுள்ளார். இதை அந்த மாணவி மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்த மாணவர், உடன் படிக்கும் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக மாணவிக்கு குளிர்பானத்தை கொடுத்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த மாணவிக்கு மறுநாள்(மே 13) வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன்தினம் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் விஷம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த பெல் போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கல்லூரி மாணவர் ஒருவர் மாணவியை கடந்த ஒரு மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 11-ம் தேதி மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்போது, வழிமறித்து காதலிப்பதாக கூறியதையடுத்து, மறுத்ததுடன் அந்த மாணவைர செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை அந்த மாணவர் மற்றும் உடன் படிக்கும் 2 பேர் கல்லூரி அருகே ஒரு ஒதுக்குப்புறமான சந்து பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர் என்று மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெல் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் குளிர்பானத்தில் என்ன வகை விஷத்தை கலந்தார்கள் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web