திருமணமான பெண்கள் தான் குறி... திருமண ஆசைக்காட்டி நகைகளை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர்!

 
Kanniyakumari

கன்னியாகுமரி அருகே திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே அருமனை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவருடன் சோபியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ராஜு சோபியாவை திருமணம் செய்துகொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது.

Raji

இந்நிலையில், ராஜு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி குளச்சல் காவல் நிலையத்தில் சோபியா புகார் அளித்துள்ளார். இதனிடையே, குளச்சல் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸி என்பவரும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவருடனும் ராஜுக்கு பழக்கம் இருந்துள்ளது. பிரின்ஸியையும் திருமணம் செய்வதாக ராஜு ஆசைவார்த்தை கூறி மயக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்வதாக கூறி பணம், நகைகளை வாங்கி ராஜு ஏமாற்றிவிட்டதாக பிரின்ஸியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி மயக்கும் ராஜு குறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Colachel-PS

ஏற்கனவே, கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி என்பவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கணவனை பிரிந்து வாழும் பெண்களைக் குறிவைத்து பணம், நகைகளை வாங்கி மோசடி செய்ததாக ராஜு மீது புகார்கள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web