அத்தனையும் நடிப்பா அபிநயா?? திருமணமான 2 மாதத்தில் 17 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன காதல் மனைவி!!

 
Abhinaya

தாம்பரத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளிடையில் அது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய நடராஜன், இதற்காக அபிநயாவிடம் அவரது பெற்றோரை தனது வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறினார். ஆனால் தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார். 
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாம்பரம் ரங்கநாதபுரத்தில் நடராஜன், அபிநயா இருவரும் நடராஜனின் பெற்றோர் மற்றும் தம்பியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
Abhinaya
திருமணத்துக்கு பின் நடராஜன், அபிநயா இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் நடராஜனின் பெற்றோர், தம்பி வேலைக்கு சென்ற நிலையில் நடராஜன், அபிநயா மட்டும் வீட்டில் இருந்தனர். நடராஜன் முடிச்சூர் பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். 
அப்போது தனது காதல் மனைவி அபிநயா மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த நடராஜனின் தாய்க்கு சொந்தமான 17 சவரன் தங்க நகை, சீட்டு பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் அபிநயாவுக்கு திருமணத்துக்கும், தீபாவளிக்காகவும் வாங்கி வைத்து இருந்த பட்டுப்புடவைகள், புதுதுணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அபிநயா ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து நடராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றிய போலீசார், அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் எனவும், தந்தை பெயர் அய்யப்பன் எனவும் இருந்தது. அந்த முகவரியில் அபிநயா உள்ளாரா? அல்லது அது போலி முகவரியா? எனவும், அபிநயாவின் குடும்ப பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tambaram
நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அபிநயா, செல்போனில் யாருடனோ பேசியபடி இருப்பாராம். எனவே அவர் மோசடி செய்யும் திட்டத்துடன் நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து திருமணம் செய்து, நகை, பணத்தை சுருட்டிச்சென்றாரா? அல்லது திருமணத்துக்கு பிறகு வேறு யாருடனும் பழக்கம் ஏற்பட்டு அதனால் நகை, பணத்துடன் காதல் கணவரையும் தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web