கை, கால்களை கட்டி போட்டு கத்தியால் வாலிபர் குத்திக்கொலை.. நண்பர்கள் 3 பேர் கைது!!

 
tiruppur

திருப்பூரில் வாலிபரை கை, கால்களை கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் குட்டப்பாளையம் மேட்டுக்காட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மகன் அஜித்குமார் (23). இவர் திருப்பூர் ராக்கியாபாளையம் பொன்நகர் 4-வது வீதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். அஜித்குமார் காங்கயத்தில் 2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த அஜித்குமார் பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து தினமும் காங்கயம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். கடந்த 3-ந் தேதி இரவு 7.45 மணி அளவில் வீட்டில் இருந்த அஜித்குமார் தனது நண்பர்களை சந்தித்து வருவதாக அவருடைய தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டு மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

murder

இதைத்தொடர்ந்து நல்லூர் காவல் நிலையத்தில் லட்சுமி தனது மகனை காணவில்லை என்று 4-ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 5-ம் தேதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கல்லம்பாளையம் காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அஜித்குமார் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். அஜித்குமார் வீட்டில் இருந்து செல்லும்போது சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த நண்பர்களை சந்திப்பதாக கூறி சென்றுள்ளார். அதை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். அதன்படி கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த வல்லரசு (23), திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த கணேஷ் (26), ஷாஜகான் (25) ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அஜித்குமார் கோவை மத்திய சிறையில் இருந்தபோது, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் இருந்த வல்லரசு, ஷாஜகான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஜித்குமாருக்கும், வல்லரசுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று கூறி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வல்லரசு, அஜித்குமார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே சென்றதும், அஜித்குமாருக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளார்.

Tiruppur-North-PS

வல்லரசு தனது நண்பரான ஷாஜகான் மற்றும் மற்றொரு நண்பரான கணேஷ் ஆகியோரிடம் திட்டத்தை தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று மது அருந்த அஜித்குமாரை அழைத்துள்ளனர். கடந்த 3-ம் தேதி மோட்டார் பைக்கில் வந்த அஜித்குமார், ஷாஜகான் வீட்டு அருகே மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு 3 பேரும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபோது, சிறையில் நடந்த சம்பவத்தை பற்றி பேசியதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்து 3 பேரும் சேர்ந்து அஜித்குமாரை கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

அஜித்குமாரின் மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர். கொலை வழக்கு தொடர்பாக வல்லரசு, கணேஷ், ஷாஜகான் ஆகிய 3 பேரை வடக்கு போலீசார் கைது செய்து நீதின்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web