9 மாத கர்ப்பிணி தற்கொலை.. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கைது!!

9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 2-வது தெருவில் விசத்து வருபவர் கிரண்குமார் (25). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசித்து வந்த பி.காம் பட்டதாரியான மணிமேகலை (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக அப்பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், மணிமேகலை 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி மணிமேகலை திடீரென படுக்கை அறையில் புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மணிமேகலையை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த நிலையில் மணிமேகலையின் தாய் இந்துமதி தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே அவரது கணவர் கிரண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனதால் சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ.ரங்கராஜன் விசாரணை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, 9 மாத கர்ப்பிணியான மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உறுதியான நிலையில் கணவர் கிரண்குமாரை போலீசார் கைது செய்தனர்.