கழுத்தில் செலுத்திய போதை ஊசி.. அதிர வைத்த இளைஞர் மரணம்.. சென்னையில் ஷாக்!

 
Chennai

சென்னையில் போதைக்கு அடிமையான இளைஞர் அளவுக்கு அதிகமான போதை ஊசியை செலுத்திக்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கனகராயத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (48). இவரது மனைவி வேலா (45). இந்த தம்பதிக்கு சங்கீதா என்ற மகளும், புருஷோத்தமன், சதீஷ் ஆகிய மகன்களும் இருந்தனர். மணியும், அவரது மனைவி வேலா இருவரும் சேர்ந்து வில்லிவாக்கம் மார்க்கெட்டில் சொந்தமாக பூமாலை கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களது மகன் சதீஷ் (22) கடந்த 2 ஆண்டுகளாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை செங்குன்றத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். மூன்று மாதம் சிகிச்சை முடிந்து வந்த சதீஷ் போதைப் பழக்கத்தில் இருந்து மீளவில்லை. அவர் தொடர்ந்து அதிக போதைக்காக பல்வேறு போதை ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

dead-body

இந்த நிலையில், இன்று காலை சதீஷ் தனது வீட்டருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அளவு அதிகமான போதை மருந்தை ஊசியில் எடுத்து தனது கழுத்தில் செலுத்திக் கொண்டார். அப்போது போதை தலைக்கேறி சதீஷ் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த அவரின் உறவினர் லதா என்பவர் சம்பவ இடத்திற்குச் சென்று சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார், சதீஷ் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன சதீஷ், டைக்கோபின் என்ற போதை மருந்தை அவ்வப்போது பயன்படுத்தி வந்ததும் இன்று காலை அளவுக்கு அதிகமான போதை மருந்தை கழுத்தில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

Pulianthope PS

இதையடுத்து சதீஷ் பயன்படுத்திய போதை மருந்து மற்றும் ஊசி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர் எங்கிருந்து இந்த மருந்தை வாங்கினார் என்பது குறித்து அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சதீஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web