இளம் மனைவியை கொலை செய்வதற்கு முன்னதாக ஆன்லைனில் பொண்ணு பார்த்த கணவன்?
மனைவியைக் கொன்று விட்டு காணாமல் போனதாக பல மாதங்கள் நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள வெர்ஜினியா மாநிலத்தின் பிரின்ஸ் வில்லியம்ஸ் கவுண்டியின் மனசாஸ் பார்க் நகரில் வசித்து வந்த அமெரிக்க இந்தியரான நரேஷ் பட் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் முதல் தனது மனைவி காணாமல் போனதாக சொன்ன நரேஷ், மனைவியைத் தேடுவதற்கான முயற்சிகள் எடுக்காமல் ஆன்லைனில் மறுமணம் செய்வதற்காக பெண்களைத் தேடியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நரேஷ் பட்டின் மனைவி நேபாள நாட்டைச் சார்ந்த 28 வயது மம்தா கஃப்லே பட் ஆவார். இவர் மருத்துவமனை ஒன்றில் நரஸ் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். மம்தாவை கடைசியாக ஜுலை 29ம் தேதி தான் பார்த்துள்ளனர். ஆகஸ்ட் 5ம் தேதி தான் மனைவி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் நரேஷ். அப்போது ஜூலை 31ம் தேதி இரவு உணவு ஒன்றாக அருந்தியதாகவும் மம்தா தான் உணவை சமைத்திருந்தார், வாக்குவாதம் ஏதும் இல்லை, அந்த இரவு அமைதியாகவே கடந்தது என்று போலீசாரிடம் நரேஷ் கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் ஜூலை 30ம் தேதி சாண்டிலி நகரில் உள்ள வால்மார்ட் சென்று 3 கத்திகள் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்த நாள், வேறு ஒரு வால்மார்ட் கடையில் சுத்தம் செய்வதற்கான பொருட்களை வாங்கியது காமிராவில் பதிவாகியுள்ளது.
போலீஸாரிடம் தானும் மம்தாவும் பிரிந்து விட முடிவு செய்துள்ளதாகவும், மம்தா நியூயார்க் அல்லது டெக்சாஸில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளார் நரேஷ். மேலும் செல்லும் போது தன்னுடைய செல்போனை மம்தா உடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மம்தாவுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை என்பது போலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. மம்தா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலிஸார் நரேஷை ஆகஸ்ட் 22ம் தேதி கைது செய்தனர். வீட்டில் சோதனையிட்ட போது படுக்கை அறையிலும் பாத்ரூமிலும் ரத்தக்கறை சிக்கியுள்ளது. அது மம்தாவின் ரத்தத்துடன் ஒத்திருப்பது டி.என்.ஏ சோதனையில் உறுதியாகியுள்ளது. மம்தாவின் உடல் கிடைக்கவில்லை. இறந்த உடலை மறைத்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நரேஷ் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,
முன்னதாக அமெரிக்க உளவுத்துறையில் பணிபுரிந்துள்ள நரேஷ் பற்றிய கூடுதல் தகவல்களை உளவுத்துறை போலீஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதில் அலுவலக லேப்டாப்பை பயன்படுத்தி ”மனைவி இறந்த எத்தனை மாதம் கழித்து மறுமணம் செய்து கொள்ளலாம்”, ” மனைவி இறந்தால் கடன்கள் என்னாகும்” என ஏப்ரல் மாதமே கூகுளில் தேடியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
மனைவியை கொலை செய்து உடலை மறைத்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நரேஷ் மீது வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வேண்டாத மனைவியை விவாகரத்து செய்வதை விடுத்து, திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க இந்தியர் நரேஷின் நடவடிக்கை அமெரிக்க இந்திய சமுதாயத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளாது.
