ரூ. 41 லட்சம் மோசடி வழக்கு.. நடிகை நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி கைது? பாஜகவில் சலசலப்பு
நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமிதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
அதையடுத்து 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இவர் வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை 2017-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த 8 மாதங்களில் இவர் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு நமிதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது நமிதா வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவுக்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதே வேளையில் தமிழ்நாட்டில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
இந்த நிலையில் நமிதாவின் கணவர் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவர் MSME ப்ரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தமிழ்நாடு தலைவராக உள்ளார். அதாவது சிறு குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி ரூ 41 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சேலம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்த வழக்கில் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நமிதாவின் கணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை ஆஜராகவில்லை என்பதால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.