தக்காளி சாஸில் நெளிந்த புழு.. உதகை ஹோட்டலில் சாப்பிட்ட விஜய் பட நடிகர் அதிர்ச்சி!

 
Vijay vishwa Vijay vishwa

தனியார் ஹோட்டலில் இருந்த தக்காளி சாஸில் புழுக்கள் இருப்பதாக நடிகர் விஜய் விஷ்வா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

2012-ல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிசரவணன் என்ற விஜய் விஷ்வா. அதனைத் தொடர்ந்து பிகில், மாயநதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸில் கெட்டுப்போன வாசனை வந்துள்ளது.

இதனால், அந்த தக்காளி சாஸ் பாட்டிலை திறந்து பார்த்த நிலையில் அதில் புழுக்கள் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Vijay Vishwa

இதுகுறித்து விஜய் விஷ்வா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, “நாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு வந்திருந்தோம். அங்கு சாப்பிடுவதற்காக தனியார் ஹோட்டலுக்கு வந்தோம். இந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்குவதற்கு ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் என்று கூறினார்கள். எங்களுக்கு அருகில் எந்த ஹோட்டலும் இல்லாத நிலையில், நாங்கள் இங்கு வந்தோம்.

இதனையடுத்து, இங்கு நாங்கள் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். அப்பொழுது, இங்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸில் கெட்டுப்போன வாசனை வந்தது. இதனால், அவற்றை திறந்து பார்த்த நிலையில் அதில் புழுக்கள் இருந்தது. இதனால், ஹோட்டல் ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்தோம். அதற்கு அவர்கள், ‘நாங்கள் என்ன செய்வது நீங்கள் மேனேஜரிடம் பேசுங்கள்’ என்றனர்.


ஹோட்டல் ஊழியர்கள் மிகுந்த அலட்சியத்துடன் பேசுகின்றனர். நாங்கள் அந்த உணவினை சாப்பிட்டதால் எங்களுக்கு வாந்தி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் ஹோட்டலுக்குச் சென்றால் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து, அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web