மதகஜராஜா போல் இந்தப் படங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

 
Idam Porul Eval

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்த மதகஜராஜா திரைப்படம் முடிவடைந்து 12 வருடங்களாக திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்தது. ஒருவழியாக பிரச்சனைகளைக் கடந்து ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளுக்கு வெளியாக உள்ளது,

மதகஜராஜா படத்தைப் போல் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் பலவும் முடிவடைந்து திரையரங்கை எட்டிப்பார்க்க முடியாமல் உள்ளன.  இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம் மன்னவன் வந்தானடி. ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 படம்  2018ல் வெளியிட தயாராக இருந்தது. சில பிரச்சனைகளால் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.அரவிந்தசாமி, த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் இந்தப்படத்தை இப்போது வெளியிட்டாலும் நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்ததா இல்லையா என்று தெரியவில்லை.பல மாறுதல்களைப் பார்த்த இந்தப்படம், இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால்  தவிக்கிறது . .

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப், ஆத்மீகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நரகாசூரன். 2018ல் தியேட்டர் ரிலீசுக்கு தயாராக இருந்த இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் உருவான திரைப்படம் சர்வர் சுந்தரம்.  நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சந்தானம் ஹீரோவாக நடித்த சமீபத்திய படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால் இன்னமும் கிடப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது படம் முடிவடையவில்லையா என்றும் தெரியவில்லை.

இதைப் போல் முன்னணி நடிகர்கள் நடித்து, பிரபல இயக்குனர்கள் இயக்கிய பல படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. உலக நாயகனின் மருத நாயகம் மர்மமான நிலையில் இருக்கும் போது அவர் அறிவித்த மர்மயோகி, சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான் போன்ற படங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பது அவருக்கே வெளிச்சம். இந்தியன் 3 ம் பாகமும் பிரச்சனையில் இருக்கிறது.

From around the web