நடிகர் பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தில்.. கோமியத்தால் கல்லூரியை சுத்தம் செய்த பாஜக மாணவர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு
நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சிறந்த குணச்சித்திர நடிப்புக்காக பெயர் பெற்ற பிரகாஷ் ராஜ் அடிக்கடி சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி வருகிறார். இவர் தொடர்ந்து பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாட்டை அவர் கடுமையாக சாடி வருகிறது. அதோடு இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இது குறித்து அறிந்த மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது எனக் கூறினர்.
மேலும் கல்லூரி அருகே போராட்டமும் நடத்தினர். இதில் பாஜக பிரமுகர்களும் பங்கேற்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கைவிட போலீசார் கூறிய நிலையில் மாணவர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து அவர்களை கல்லூரிக்குள் நுழையாமல் தடுக்க இரும்பு தடுப்புகள் கல்லூரி வாசலில் வைக்கப்பட்டன. இதன்மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரிக்கு நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சென்று சிறப்புரையாற்றினர். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே தான் மாணவர்களில் ஒரு தரப்பினர் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதனை போலீசார் உறுதி செய்யவில்லை.
அதோடு நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோமியம் கொண்டு சுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.