விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
Siddique

பிரபல மலையாள இயக்குநர் சித்திக் மாராடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

1986-ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன்’ என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர் சித்திக். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து மோகன்லால் நடித்த ‘நாடோடிக்காட்டு’ என்கிற படத்திலும் கதை எழுதினார்.

1989-ம் ஆண்டு வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். அதனைத் தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களை இயக்கியுள்ளார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராகவும் மாறினார்.

Siddique

2001-ல் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கொச்சியில் வசித்து வரும் சித்திக், கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

RIP

இந்நிலையில், இன்று மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 9.10 மணியளவில் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சித்திக்கின் மரண செய்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது இரங்லைத் தெரிவித்து வருகின்றனர்.

நாளை (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கொச்சி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web