விஜயகாந்த் பட இயக்குனர் எஸ்.டி.சபா காலமானார்!
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படமான பரதன் படத்தின் இயக்குனர் எஸ்.டி.சபா காலமானார். சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்திரையுலகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்து வந்தவர் தான் சபா. 1992 ல் விஜயகாந்த் நடிப்பில் பரதன் திரைப்படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளும் பாடல் காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இளையராஜவின் இசை மற்றும் குரலில் புன்னகையில் மின்சாரம் பாடல் அனைத்து ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பரதன் படத்தைத் தொடர்ந்து எங்க தம்பி. சுந்தர புருஷன், வி.ஐ.பி, புன்னகைப் பூவே, நாம், அ,ஆ,இ.ஈ, பதினாறு ஆகிய தமிழ்ப்படங்களை இயக்கினார் எஸ்.டி.சபா. பண்டேம் என்ற தெலுங்குப் படத்தையும் இயக்கியுள்ளார். பதினாறு படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார் எஸ்.டி.சபா.
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு கதையை எஸ்.டி.சபா உருவாக்கி வைத்து இருந்ததாகவும் அதில் அஜீத் ஐ நடிக்க வைக்க விரும்பியதாகவும் பிரபல பத்திரிக்கைத் தொடர்பாளர் வி.கே.சுந்தர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.